×

கோட்டூர் - மேலப்பனையூர் இடையே பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜூன் 4: கோட்டூரில் இருந்து மேலப்பனையூர் செல்லும் சாலை போதிய பராமரிப்பின்றி ஜல்லிகள் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறி கிடப்பதால் இந்த சாலையை உடன் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலப்பனையூர் ஊராட்சியிலிருந்து கோமளப்பேட்டை வழியாக கோட்டூர் வரை சாலை வசதி உள்ளது. இந்த சாலையை கோட்டூர் ஒன்றியத்தை சித்தமல்லி, பெருக வாழ்ந்தான், தென்பரை, பாலையூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மாணவ, மாணவிகள், வர்த்தகர்கள், மேலப்பனையூர் வழியாக கோட்டூர் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அவசரகதியில் போடப்பட்ட இந்த தரமில்லாத சாலையில் மேலப்பனையூர், கோமளப்பேட்டை, கோட்டூர் இடையிலான சுமார் 4 கிமீ தூரத்திற்கான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதிய பராமரிப்பின்றி சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறிக் கிடக்கிறது. பல்லாங்குழி சாலையால் கடந்த 3 ஆண்டுகளாக இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சாலை சீரமைக்கப்படாததால் இவ்வழியே பேருந்தும் வசதியும் செய்து தரப்படவில்லை. இந்த சாலையை பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். அறுவடை சீசன்களின் போது தங்களின் விளை பொருட்களை மெயின் ரோட்டிற்கு கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே இந்த பல்லாங்குழி சாலையை உடன் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஜீவானந்தம் கூறுகையில், மேலப்பனையூர் ஊராட்சியிலிருந்து கோமளப்பேட்டை வழியாக கோட்டூர் வரை செல்லும் சாலை போதிய பராமரிப்பின்றி ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிக்கிடக்கிறது. இந்த சாலையின் வழியாகத்தான் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோட்டூரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கோட்டூரில் உள்ள யூனியன் அலுவலகம், வேளாண்மை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு இந்த சாலை வழியாகத்தான் போக வேண்டி உள்ளது. சாலை மோசமாக இருப்பதாலும் குண்டு குழிகள் அதிகமாக இருப்பதாலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து தருமாறு கோட்டூர் யூனியன் அலுவலகத்திற்கு பலமுறைகள் மனுக்கள் அளித்தும் பலனில்லை. எனவே மேலப்பனையூர், கோமளப்பேட்டை, கோட்டூர் இடையிலான பல்லாங்குழி சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து புதிதாக போட்டு தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேலப்பனையூர், கோட்டூர், பாலையூர் கிளைகள் சார்பில் வரும் 11ம் தேதி கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதன் பின்னரும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு தொடர்ந்தால் பல்லாங்குழி சாலையில் நாற்று நடும் போராட்டமும் நடத்த உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் உடன் இப்பிரச்னையில் தலையிட்டு மேலப்பனையூர், கோமளப்பேட்டை, கோட்டூர் இடையிலான பல்லாங்குழி சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து புதிதாக போட்டு தர வேண்டும் என கூறினார்.

Tags : Pallurangai ,road ,Kothur-Melapanaiyoor ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...